கொடிகாமத்தில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தை அகழ்ந்தபோது வெடிக்காத நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குழாய்களைப் புதைப்பதற்காக நிலத்தை அகழ்ந்து போது சந்தேகத்துக்கிடமான முறையில் உரைப் பை ஒன்று காணப்பட்டதையடுத்து, கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த உரைப் பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைக் கோர்வைகள் காணப்பட்டன.
அவற்றை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்ற பொலிஸார், அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்படுகின்றன எனவும், அவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தனர்.