பேராதெனியா இந்து கல்லூரிக்கு ரூ.6 லட்சம் பெறுமதியான வளங்களை வழங்கிய அகரன் அறக்கட்டளை
கடந்த மாதம் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தின் கண்டி கல்வி வலயத்திற்குட்பட்ட பேராதெனியா இந்து கல்லூரியில் பாரிய சேதங்கள் பதிவாகியிருந்தன. மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் விளைவாக பாடசாலைக்குள் 13 அடிக்கு மேல் நீர் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் கருவிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் சேதமடைந்தன. இதனால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் 350 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையை அறிந்த அகரன் அறக்கட்டளை, உடனடியாக பேராதெனியா இந்து கல்லூரிக்கு ரூபாய் ஆறு லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள், பேண்ட் வாத்திய கருவிகள் மற்றும் வெண் பலகைகள் ஆகியவற்றை வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 34 மாணவர்களுக்கு காலணிகள் பெற்றுக் கொள்வதற்காக தலா ரூ.3,500 பெறுமதியான பண வுச்சர்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதோடு, பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
இந்த நிகழ்வில் அகரன் அறக்கட்டளையின் தலைவர் திரு பழனி ஜோதி, செயலாளர் திரு முரளி, பொருளாளர் திரு விஸ்வநாதன், ஊடகவியலாளர் செனன் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர், பாடசாலை அதிபர் திரு இராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்களுடன், பாடசாலைக்கு எதிர்காலத்தில் தேவையான மேலதிக உதவிகள் தொடர்பாக கலந்துரையாடலும் நடைபெற்றது.
What's Your Reaction?



