கொட்டகலை பிரதேச சபை தலைவரின் போலி கையொப்பத்தை பயன்படுத்தி ஊழல்!

SaiSai
Jan 7, 2026 - 22:04
 0  34
கொட்டகலை பிரதேச சபை தலைவரின் போலி கையொப்பத்தை பயன்படுத்தி ஊழல்!

கொட்டகலை பிரதேச சபை தலைவரின் போலியான கையொப்பம்

பதவி முத்திரை, பண வசூல் தொடர்பாக சி.ஐ.டி.யில் முறைப்பாடு

-மாதாந்த அமர்வில் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு

                                            ( மஸ்கெலியா நிருபர் )

    கொட்டகலை பிரதேச சபை 2023 இல் கலைக்கப்பட்ட பிறகு தலைவரின் கையொப்பத்தை போலியாக இட்டும், போலியான பதவி முத்திரையைத் தயாரித்து, கண்டபடி பணம் வசூல் செய்து, ரசீதுகளை வழங்கியும் மோசடி செய்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

    சபையின் மாதாந்த அமர்வு புதன்கிழமை (7) இடம்பெற்றபோது தலைமை வகித்துப் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

     கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரவும், பிறந்துள்ள புத்தாண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமையவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கியுள்ள ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதோடு, தேவையான விபரங்களை தந்துதவுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். புதிய வேலைத் திட்டங்களை பூர்த்தி செய்ய வருட இறுதி வரை காத்திருக்காமல் விரைவில் செய்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும்.

     உள்ளூராட்சி மன்றங்கல் 2023 இல் கலைக்கப்பட்டிருந்தன. கொட்டகலை பிரதேச சபையில் இக்காலப் பகுதியில் முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை இப்போது அம்பலமாகியுள்ளது. பிரதேச சபையில் பணிபுரிந்த சில நபர்கள் போலியான முறையில் தலைவரின் கையொப்பத்தை இட்டும் பதவி முத்திரையைப் பயன்படுத்தியும், ஆயிரக் கணக்கில் பணத்தை வசூலித்தும், அதற்கான ரசீதுகளை வழங்கியுள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் பதவியில் இல்லாத தலைவருக்கோ சபைக்கோ அபகீர்த்தி ஏற்படாமல் இருக்க இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாரும் இருந்தால் முறைப்பாடு செய்யலாம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

     கொட்டகலை தகனசாலையின் கட்டணம் பொதுமக்களதும், உறுப்பினர்களதும் வேண்டுகோளுக்கு அமைய ஜனவரி மாதத்திலிருந்து 1000 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதோடு மேலும் குறைக்க எதிர்பார்கப்படுகின்றது. பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து, தற்காலிகக் கட்டிடத்துக்கு செலுத்தப்படும் வாடகையை மீதப்படுத்தவுள்ளோம். நகரில் உள்ள மதுபானசாலைகளை காலையிலேயே திறக்காமல் மாலையில் திறப்பதற்கு கலால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதனின் வேண்டுகோளுக்கு அமைய கணபதிபுரத்தின் பாதை சீரமைப்பு சுமுகமான முறையில் மேற்கொள்ளப்படும்.

     ஹரிங்டன் தோட்டத்தில் பிரதேச சபைக்கு ஒரு ஏக்கர் காணி கிடைக்கவுள்ளது. அதில் 25 பேர்ச்சஸ் காணியை ஐயப்பன் சுவாமி திருப்பணிக்காகப் பயன்படுத்தவுள்ளோம். மலையகத்தில் ஐயப்பன் பக்தர்களில் பல பிரிவுகளாக உள்ளார்கள். இது வேதனையான விடயமாகும். எனவே, ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடுவதற்கும் சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கும் அவர்கள் ஒரு மண்டபத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்படும். எனினும், காணி பிரதேச சபைக்கே சொந்தமாக இருக்கும். இது சம்பந்தமாக விரைவில் ஆலோசனைகள் பெறப்படவுள்ளது என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow