தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் வாழ்த்து.

SaiSai
Aug 8, 2026 - 10:44
 0  33
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் வாழ்த்து.

வாழ்வின் முதல் சவாலை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வாழ்த்து

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் வெற்றிக்கான நம்பிக்கையையும் தெரிவித்துள்ளது.

மன்றத்தின் தலைவர் ஆர். விஸ்வநாதன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்வின் முதல் குறிப்பிடத்தக்க கல்விச் சவாலை தன்னம்பிக்கையுடனும் மனத்திடத்துடனும் எதிர்கொள்ளும் அரிய தருணமாக இப்பரீட்சையை மாணவர்கள் கருத வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இதனை அச்சத்திற்குரிய பரீட்சையாக அல்லாது, அனுபவத்தையும் அறிவையும் செம்மைப்படுத்தும் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மாணவர்களின் மனஉறுதியைத் தளரச் செய்யக் கூடாது என்றும், இயற்கை மனித வாழ்விற்கு வழங்கும் பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகிய உயரிய வாழ்வியல் பாடங்களை இளம் வயதிலேயே உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பரீட்சை நேரத்தில் அமைதியான மனநிலையையும் தெளிவான சிந்தனையையும் பேணிச் செயல்படுமாறும், வெற்றி–தோல்வி இரண்டையும் சமநிலையுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ச்சியான முயற்சியே உயர்விற்கான அடித்தளம் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றமும் அறிவியல் வளர்ச்சியும் மலையக சமூகத்தின் எதிர்கால வளமைக்கும் அடிப்படையாகும் என்பதை சுட்டிக்காட்டிய தலைவர் விஸ்வநாதன், கல்விப் பயணத்தின் ஒவ்வொரு படியிலும் மாணவர்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் உறுதுணையாகவும் ஊக்குவிக்கும் சக்தியாகவும் தொடர்ந்து செயற்படும் என தனது வாழ்த்துச் செய்தியில் உறுதியளித்துள்ளார்.

ஊடகப் பிரிவு 

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow