காதலிப்பதாக நடித்து இலட்சங்கள் மோசடி: இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீட்டொன்றில் இளம்பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் நதுனி சஹஷ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், திருமணம் செய்யாமல் 27 வயதுடைய இளைஞருடன் ஒன்றாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இரவு, பணம் தொடர்பான தகராறு முற்றிய நிலையில் ஏற்பட்ட கோபத்தில், இளைஞர் கத்தியால் நதுனியின் நெஞ்சில் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் தற்கொலைக்கு முயன்ற அவர், பின்னர் ரயிலின் முன் பாய்ந்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த நதுனியும் அவரது தாயாரும் நீண்டகாலமாக இளைஞர்களை காதலிப்பதாக நம்பவைத்து பணம் மோசடி செய்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த ஒருவர், தாயும் மகளும் இணைந்து தன்னிடம் 15 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், மற்றொருவரிடமிருந்தும் சுமார் 10 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?



