இலங்கையின் அரசு மருத்துவமனைகளில் 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில்!
இலங்கையின் அரசு மருத்துவமனைகளில் 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில்!
இலங்கையில் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக 25,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளின் அறுவை சிகிச்சைகளை விரைவுபடுத்த அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் இதுவரை எதிர்பார்த்தளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஏழை நோயாளிகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படும் நிதியை அதிகரித்து, அரசு மருத்துவமனைகளில் நீண்டகாலமாக காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
அல்லது, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி, நாளாந்தம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 2029ஆம் ஆண்டு வரை நீடிப்பதாகவும், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக தினமும் புதிய நோயாளிகள் சேர்க்கப்படுவதால், நாட்டின் சுகாதாரத் துறை கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நிபுணத்துவ மருத்துவர்களை உருவாக்கும் பயிற்சித் திறனை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நவீன அறுவை சிகிச்சை மற்றும் பரிசோதனை உபகரணங்களை கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் இந்த காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?



