வீட்டு பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் -புரோடக் அமைப்பு கோரிக்கை

SaiSai
Jun 16, 2026 - 21:53
 0  17
வீட்டு பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் -புரோடக் அமைப்பு கோரிக்கை
வீட்டு பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள் -புரோடக் அமைப்பு கோரிக்கை

வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: கருப்பையா மைதிலி

ஹட்டன், ஜூன் 16 – வீட்டுப் பணியாளர்கள் தொழில்துறையில் சம அந்தஸ்தும் உரிமைகளும் பெறாத நிலையில், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தத் தவறி வருவதாக ப்ரொடெக்ட் அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.

சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஹட்டன் லா எடம்ஸ் விருந்தகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதனை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர்களே என்பதால், அவர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சுரண்டல்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், வீட்டுப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம், ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொழில் அமைச்சும் தொழில் திணைக்களங்களும் போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

ஆட்சிக்கு வரும் முன்னர் வீட்டுப் பணியாளர்களின் ஆதரவை நாடும் அரசியல் தரப்புகள், ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அவர்களின் பிரச்சினைகளை மறந்து விடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியான ஏமாற்றங்களுக்கும் தொழில் நியாயங்கள் மறுக்கப்படுவதற்கும் உள்ளாகும் துறையாக வீட்டுப் பணியாளர்களின் தொழில் காணப்படுவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதுடன், அவர்களின் வாழ்வாதாரம், நலன்புரி மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் உடனடி தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow