மலையக மாணவர்களின் புலமைப் பரிசில் வெற்றிப் பாதையை வகுக்கும் அறிவொளி முன்னோடி பரீட்சை நாளை

SaiSai
Jul 24, 2026 - 20:57
 0  23
மலையக மாணவர்களின் புலமைப் பரிசில் வெற்றிப் பாதையை வகுக்கும் அறிவொளி முன்னோடி பரீட்சை நாளை

மலையக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற வழிகாட்டும் நோக்கில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் நடத்தி வரும் "அறிவொளி தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடி பரீட்சை" நாளை (25) மலையகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

இம்முன்னோடி பரீட்சிக்காக அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்புடன், தேசிய பரீட்சைத் தரநிலைகளுக்கு ஏற்ப உயர்தர வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை வலயக் கல்விப் பணிமனைகள் ஊடாக மலையகத்தின் 450-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 25,000 மாணவர்கள் இப்பரீட்சையின் மூலம் பயனடையவுள்ளனர் என மன்றத்தின் பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குகள் பிரிவு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களது அறிவாற்றல், நேர முகாமைத்துவம் மற்றும் பரீட்சைத் திறன்களை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உண்மையான புலமைப் பரிசில் பரீட்சையை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் இம்முன்னோடி பரீட்சை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த கல்விசார் முயற்சி, மலையக மாணவர்களின் புலமைப் பரிசில் பெறுபேறுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பிரதேச அமைப்பாளர்கள் அனைவருக்கும் மன்றம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow