நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைக்கு அடிமை – அமைச்சர் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் ஒவ்வொரு 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு இரையாகி வருவதால், நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் தாய்மார்களும் பெண்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
போதைப்பழக்கத்தால் பிள்ளைகளின் கல்வி சீர்குலைவதுடன், அவர்களின் எதிர்காலமும் இருண்டு போவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பேரழிவிலிருந்து நாட்டை மீட்க அரசாங்கம் மட்டுமன்றி சமூகத்தின் அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியும் அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், சமீபத்திய கைது நடவடிக்கைகள் மூலம் அரசியல் பின்னணிகளுக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விடுவிப்பதற்காக கோடிக்கணக்கில் இலஞ்சம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரச இயந்திரங்கள் கூட தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும், இந்த நடவடிக்கையில் எந்தவித பின்னடைவுமின்றி செயல்படப்படும் என்றும் உறுதியளித்தார்.
What's Your Reaction?



