அதாவுல்லாஹ்வின் புதல்வருக்கு செப். 01 வரை விளக்கமறியல்
அதாவுல்லாஹ்வின் புதல்வருக்கு செப். 01 வரை விளக்கமறியல்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி வரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச பெண் அதிகாரி ஒருவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை செப்டெம்பர் 01ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சக்கி அதாவுல்லாஹ் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த பெண் அண்மையில் பேஸ்புக் நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நியாயம் கோரியிருந்தார்.
இதனையடுத்து, குறித்த பெண் அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக பணியகத்திற்கு வருகை தந்தபோது, பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த 18ஆம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் காலம் செப்டெம்பர் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
– பாறுக் ஷிஹான்
What's Your Reaction?



