தோட்டப்புறப் பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்கு – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தோட்டப்புறப் பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்கு
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தோட்டப்புறப் பகுதிகளைச் சார்ந்த பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்குகளில் ஒன்றாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட தோட்டப்புறப் பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தோட்டப்புறப் பாடசாலைகள் மாணவர்களுக்கான கற்றல்–கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதே இந்தப் பட்டறையின் பிரதான நோக்கமாகும்.
தோட்டப்புறப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான புதிய திட்டங்களை ஆரம்பித்தல், தேசிய மூலோபாய மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் மாதிரிக்கு ஏற்ப திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், தொழிற்கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், ஆசிரியர்களுக்கான வீடுகளை அமைத்தல், 34 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை நிர்மாணித்தல், 23 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு மதில்களை அமைத்தல் உள்ளிட்ட அமைச்சரவை அனுமதி பெற்றுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், தோட்டப்புறப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் மாணவர் நலன்புரி நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன.
ஒவ்வொரு துறையிலும் மலையக சமூகத்தினர் ஒரு சமூகமாக முன்னேற வேண்டும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
குறிப்பாக, தோட்டப்புறப் பகுதிகளில் இருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்களை அதிகளவில் உள்வாங்குவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்காக தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கட்டியெழுப்புவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.
What's Your Reaction?



