எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகள் மூடப்படுமா? – கல்வி அமைச்சு விளக்கம்
கியூ.ஆர். குறியீட்டு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் அதிகரித்துள்ள நிலையில்,
பாடசாலைகளை மூடவோ அல்லது தொலைதூரக் கல்வி முறையை ஆரம்பிக்கவோ இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டிலுள்ள பாடசாலைகள் தங்களது வழக்கமான கல்வி நடவடிக்கைகளை தொடரும் என்றும் கல்வி அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையில், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் போது ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பல அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, முக்கிய பொதுச் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?



