அஸ்வெசும பெயரில் புதிய மோசடி வலை – மக்களை எச்சரிக்கும் நலன்புரி நன்மைகள் சபை
அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தை இலக்காகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் பயனாளர்களை தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் தகவல்களை புதுப்பிப்பதாக கூறியும், வேறு போலியான காரணங்களை முன்வைத்தும் பணம் கோரும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், இவை சபையின் அனுமதியின்றி இடம்பெறும் சட்டவிரோதமான மோசடி நடவடிக்கைகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்கள் மற்றும் பணம் தொடர்பான தகவல்களை அறியாத நபர்களுடன் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான போலி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பயனாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகள் கிராம மட்டங்களில் இதுபோன்ற மோசடிகளை கண்காணித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?



