6 உயிர்களை வாங்கிய விஷ மதுபான சம்பவம்: சூத்திரதாரி கைது

SaiSai
Jan 8, 2026 - 11:18
 0  15
6 உயிர்களை வாங்கிய விஷ மதுபான சம்பவம்: சூத்திரதாரி கைது

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விஷ மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அதன் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் பிரேத பரிசோதனைகள் சிலாபம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மதுசாரம் நஞ்சாக மாறியதாலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றைய ஒருவரின் பிரேத பரிசோதனை இன்று (08) சிலாபம் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஷ மதுபானம் அருந்தி உடல்நலக் குறைவு ஏற்பட்ட மேலும் 8 பேர், தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அந்த விசாரணைகளின் போது, ஏற்கனவே இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அந்த இரு பெண்களையும் நேற்று (07) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow