14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை

SaiSai
மே 27, 2026 - 17:23
 0  66
14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை

பாடசாலை கல்வியை முடித்த பின்னர் துறவறம் பூணும் நோக்கில் விகாரைக்கு சென்றிருந்த 14 வயது சிறுவனை, அவர் வந்த முதல் நாளிலேயே கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட தேரர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அனுராதபுரம் சிறுவர் குற்றங்கள் தொடர்பான விசேட மேல் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இன்று வழங்கினார்.

தண்டனை விதிக்கப்பட்டவர் தம்புத்தேகம, ஹுரிகஸ்வெவ, தலாகொல வெவ விகாரையின் விகாராதிபதி முல்லேரியாவே விமலதிஸ்ஸ என்ற 65 வயதுடைய தேரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக 5 இலட்சம் ரூபாவை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்திலும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், முதல் குற்றச்சாட்டுக்கு 5,000 ரூபாவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளுக்கு தலா 15,000 ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தனித்தனியாக தலா 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரதிவாதி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவை பரிசீலித்த நீதிபதி, விதிக்கப்பட்ட 30 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 10 ஆண்டுகளில் ஏககாலமாக அனுபவிக்கும் வகையில் விசேட உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow