லண்டன் போலி வைத்தியர் வலையில் சிக்கிய பெண்: 8.37 இலட்சம் மோசடி பேஸ்புக் வினை
முகநூலில் அறிமுகமான போலி "லண்டன் வைத்தியர்" மோசடி: மட்டக்களப்புப் பெண்ணிடம் ரூ.8.37 இலட்சம் பறிப்பு
மட்டக்களப்பு: முகநூல் (Facebook) ஊடாக அறிமுகமானதாகக் கூறிய போலி வெளிநாட்டு வைத்தியரின் வலையில் சிக்கிய பெண்ணொருவரிடம், "லண்டனிலிருந்து அனுப்பிய பார்சலை சுங்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்" எனக் கூறி ரூ.8 இலட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கடந்த ஜூலை 13ஆம் திகதி "டான்" என்ற பெயரில் தன்னை லண்டனில் வசிக்கும் வைத்தியர் என அறிமுகப்படுத்திய நபர், முகநூல் மூலம் குறித்த பெண்ணுடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 16ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகள் விநியோகிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய மற்றொருவர், லண்டனிலிருந்து விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாகவும், அதை சுங்கத்திலிருந்து விடுவிக்க முதலில் ரூ.87,000 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பெண், குறித்த தொகையை வங்கிக் கணக்கொன்றில் செலுத்தியுள்ளார். பின்னர் மேலும் ரூ.3 இலட்சம், அதனைத் தொடர்ந்து பெண்ணின் தாயாரால் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளிட்ட பல தவணைகளாக மொத்தம் ரூ.8.37 இலட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னரும் கூடுதல் பணம் கோரப்பட்டதால் சந்தேகமடைந்த பெண், மேலதிகமாக பணம் வழங்க மறுத்துள்ளார். பின்னர் தொடர்புகொள்ள முயன்றபோது, சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் செயலிழக்கப்பட்டிருந்ததை அடுத்து, தாம் மோசடிக்குள்ளானதை உணர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகும் தெரியாத நபர்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகக் கூறி பணம் கோரும் மோசடி முயற்சிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?



