சீனாவின் அவசர உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார்.
சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What's Your Reaction?



