இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது
இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், காணி மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொலன்னறுவை மாகாண வருமான வரி மாவட்ட அலுவலகம் ஊழியர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டாளரின் உறவினருக்குச் சொந்தமான அரச காணியை அவரின் பெயருக்கு மாற்றி உறுதிப்பத்திரம் தயாரிக்கும் போது, குறித்த காணியின் மதிப்பீட்டைப் பெறுமதியை குறைத்து குறிப்பிடுவதாக சந்தேகநபர் உறுதியளித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்மூலம் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய முத்திரை வரித் தொகையை குறைத்துக் கொடுப்பதற்காக ஆரம்பத்தில் 50,000 ரூபாய் இலஞ்சம் கோரிய சந்தேகநபர், பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் 35,000 ரூபாய்க்கு இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 9.27 மணியளவில் பொலன்னறுவை மாகாண வருமான வரி மாவட்ட அலுவலக வளாகத்தில் வைத்து குறித்த தொகையைப் பெற்றுக்கொண்டபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் எதிரிவீர ஆருகட்டு படபெந்திகே சுமித் இந்திக குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?



