EPF தொகையை ஒரே முறையாக வழங்காமல் ஓய்வூதியமாக வழங்க புதிய முறை – அரசு கவனம்
தனியார் துறை ஊழியர்கள் பெறும் ஊழியர் சேமநிதி (EPF) தொகையை ஒரே தடவையாக வழங்குவதற்கு பதிலாக, ஓய்வூதியமாக வழங்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க இன்று தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே EPF அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறினார்.
தனியார் துறை ஊழியர்கள் EPF தொகையை ஒரே தவணையாகப் பெறும் போது, அவர்களின் ஓய்வுக்கால சமூகப் பாதுகாப்பு அபாயத்தில் ஆழ்கிறது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனை கருத்தில் கொண்டு, அரசுத் துறை ஊழியர்களுக்கு உள்ளதைப் போல, தனியார் துறை ஊழியர்களும் ஓய்வுக்காலம் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு தொடர்பில் தேவையான நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், இது நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்கால வாழ்க்கை பாதுகாப்பாக மாறும் என்றும் அவர் கூறினார்.
What's Your Reaction?



