குடும்பத் தகராறால் வீட்டிற்கு தீ வைப்பு – தந்தையும் 13 வயது மகளும் பரிதாப பலி
குடும்பத் தகராறால் வீட்டிற்கு தீ வைப்பு – தந்தையும் 13 வயது மகளும் பரிதாப பலி
குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், அந்த நபரும் அவரது 13 வயது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் 43 வயதுடைய தந்தையும், அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பவத்தை அறிந்த பின்னர் 20 வயதுடைய மகன் வீட்டிற்கு விரைந்து வந்து தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்றபோது அவரும் தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்தி மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறுகள் தொடர்பில் பல தடவைகள் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?



