பாகிஸ்தானில் பிரத்தியேக வகுப்பு நிலையக் கூரை இடிந்து விபத்து: 14 சிறுவர்கள் பலி
பாகிஸ்தானில் பிரத்தியேக வகுப்பு நிலையக் கூரை இடிந்து விபத்து: 14 சிறுவர்கள் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் இயங்கி வந்த தனியார் பிரத்தியேக வகுப்பு நிலையம் ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 7 முதல் 11 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக மீட்புக்குழுவின் ஊடகப் பேச்சாளர் பரூக் அகமது தெரிவித்துள்ளார்.
விபத்து நேரத்தில் பழமையான கட்டடத்தின் கூரையில் ஓடுகளைப் பழுதுபார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், கூரையின் மீது அதிக எடை வைக்கப்பட்டதே அது இடிந்து விழுவதற்கான முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
What's Your Reaction?



