எங்கள் திட்டங்களை அரசாங்கம் பிரதி செய்துள்ளமை மகிழ்ச்சி -எதிர்க்கட்சித் தலைவர்
சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்காக செல்வந்தர்களிடம் இருந்து நிதியுதவிகளைப் பெறும் எங்களது கொள்கையையே தற்போதைய அரசாங்கம் பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரநாயக்க ஆதார மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் "சுகாதாரத் துறையை மேம்படுத்த செல்வந்தர்களிடம் இருந்து பங்களிப்புகளைப் பெறும் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே முன்மொழிந்து, நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளோம். நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையானது, எமது இந்தக் கருத்தாக்கத்தையே அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது." என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறிப்பாக சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளில் நன்கொடையாளர்கள் முன்வந்து உதவுவதற்கான விசேட திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தமது கட்சியின் இவ்வாறான தூரநோக்குச் சிந்தனைகளை அரசாங்கம் இப்போது கையில் எடுத்திருப்பது, தமது அரசியல் நிலைப்பாட்டிற்குக் கிடைத்துள்ள வெற்றி என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
What's Your Reaction?



