தெரணியாகலை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
நூரியாவத்தை, தெரணியகல பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் 14 வயது சிறுவனின் உடல், அவிசாவெல்ல நீதவான் பிரமோத் ஜயசேகர அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (ஜனவரி 12) புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
குறித்த சிறுவன், கடந்த ஜனவரி 2 ஆம் திகதி தாயும் தந்தையும் உடன் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில், அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, சிறுவனின் பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், குருவிட்டா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணருமாறு கோரி, உயிரிழந்த சிறுவனின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த உடல் தோண்டெடுப்பு, மறுபடியும் உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டு மரணத்தின் துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர், ஜனவரி 2 ஆம் திகதி இரவு, நூரியாவத்தை – பிரிவு 02 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டின் அருகே சிறுவன் கிடந்ததை கண்டறிந்து, உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்
What's Your Reaction?



